பொறுமை
ஒரு நாள் புத்தர் தனது சீடன் ஆனந்தாவுடன் வனத்தைக் கடந்துகொண்டிருந்தார். அது கடுமையான கோடைக்காலம் என்பதால் புத்தருக்குத் தாகமாக இருந்தது. அவர், ஆனந்தனிடம், “கொஞ்சம் திரும்பிப் போனால், மூன்று நான்கு மைல் தூரத்தில் நாம் கடந்த ஒரு சிறு நீரோடை வரும். அதில் இந்தப் பிச்சைப் பாத்திரத்தில் நீர் மொண்டு வா. நான் மிகுந்த தாகம் மற்றும் சோர்வை உணர்கிறேன்” என்றார்.
ஆனந்தா வந்த வழியிலேயே திரும்பிச் சென்றான். ஆனால் அவன் அந்தச் சிறு நீரோடையை அடையும்போது, அவனுக்கு முன்னால் சென்ற சில மாட்டு வண்டிகள் நீரோடைக்குள் இறங்கித் தாண்டிச் சென்றதால், அந்த நீரோடை முழுவதும் கலங்கி சேறாகிவிட்டது. நீரினடியில் கிடந்த இலைகளும் மேலே வந்துவிட்டன. புத்தனின் சீடன் ஆனந்தா, நீரோடையின் நிலையைப் பார்த்துவிட்டு, இந்தத் தண்ணீரைக் குடிக்கவே முடியாது என்று நினைத்து, வெறும் கையுடன் திரும்பிவிட்டான்.
“நீங்கள் கொஞ்சநேரம் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் பொறுங்கள். அடுத்த இரண்டு மூன்று மைல்களில் ஒரு பெரிய நதி ஒன்று இருக்கிறது. அங்கே போய்த் தண்ணீர் கொண்டு வருகிறேன்’ என்று புத்தரிடம் கூறினான்.
ஆனால் புத்தரோ, மறுபடியும் சிறு நீரோடைக்குச் சென்றுதான் நீர்கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆனந்தாவால் இந்த வலியுறுத்தலைப் புரிந்துகொள்ளவே முடியவேயில்லை. ஆனால் குரு சொல்லிவிட்டாரென்றால், சீடன் அதைப் பின்பற்றுவதுதானே முறை. என்ன இது அபத்தம் என்று மனதில் நினைத்துக்கொண்டே மீண்டும் மூன்று, நான்கு மைல்கள் திரும்பவும் நடந்தான். அந்த நீரோடையின் நீர் குடிப்பதற்கு லாயக்கில்லாமல் இருக்கும் என்று நினைத்தான். அவன் திரும்பி நடந்தபோது, “ நீரோடையில் தண்ணீர் அழுக்காக இன்னும் இருந்தால் உடனடியாக வந்துவிடாதே ஆனந்தா. கரையில் கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார். எதுவும் செய்ய வேண்டாம். நீரோடைக்குள்ளும் போக வேண்டாம். சும்மா, கரையில் அமர்ந்து அமைதியாகப் பார். கொஞ்ச நேரம் கழிந்தோ நீண்ட நேரம் கழிந்தோ தண்ணீர் தெளியலாம். அப்போது தண்ணீரை முகந்து எடுத்துவந்தால் போதும்.” என்றார்.
ஆனந்தா நீரோடைக்குச் சென்றான். புத்தர் சொன்னது சரிதான். தண்ணீர் தெளிவாகும் நி இருந்தது. இலைகள் ஒதுங்கியிருந்தன. சேறு இறங்கியிருந்தது. ஆனால் இன்னும் முழுமையாகத் தெளிவடையவில்லை.
ஆனந்தா கரையிலமர்ந்து நீரோடையின் ஓட்டத்தை அமைதியாகக் கவனிக்கத் தொடங்கினான். மெதுவாக, நீரோடையின் மேற்பரப்பு ஸ்படிகம் போல மாறிவிட்டது. ஆனந்தாவுக்கு மகிழ்ச்சியில் நடனமாடத் தோன்றியது. புத்தர் ஏன் அவ்வளவு தூரம் அவனைக் கட்டாயப்படுத்தினார் என்பது புரிந்தது. அவர், கட்டாயப்படுத்தியதில் ஆனந்தாவுக்கான செய்தி இருந்தது. அவனும் அதைப் புரிந்துகொண்டான். புத்தருக்கு அவன் தண்ணீரைக் கொண்டுவந்து தந்தான். அவரது பாதங்களைத் தொட்டு நன்றி சொன்னான்.
“நீ என்ன செய்கிறாய் ஆனந்தா. நீ கொண்டு வந்த நீருக்காக நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்.”
“எனக்கு இப்போது புரிகிறது. நான் முதலில் கோபமடைந்தேன்; ஆனால் உங்களிடம் அதைக் காண்பிக்கவில்லை. திரும்ப நீரோடைக்குப் போவது முட்டாள்தனமான வேலை என்று நினைத்தேன். தற்போது எனக்கு உங்கள் செய்தி புரிந்துவிட்டது. இதுதான் எனக்கு இப்போதைய அவசியமான செய்தி. என் மனதிற்கும்தான்; அந்தச் சிறிய நீரோடையின் கரையில் அமைதியாக அமர்ந்திருந்ததைப் போல, என் மன விஷயத்திலும் விழிப்புணர்வை அடைவதற்காகக் காத்திருக்க வேண்டும்.
நான் என் மனதுக்குள் குதித்துவிட்டால், சத்தம் அதிகமாகி, கூடுதலான பிரச்சினைகள் தான் எழும். நான் இப்போது என் மனதின் கரையில் அமர்ந்திருப்பதன் முக்கியத்துவத்தை உணர்கிறேன். அதன் அசிங்கம், பிரச்சினைகள், பழைய இலைகளைப் போல மேலே வரும் காயங்கள், நினைவுகள், ஆசைகள் ஆகியவற்றை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். அதைப் பற்றித் துயருறாமல், அமைதியாக அமர்ந்திருந்தால் எல்லாம் தெளிவடையும் என்பது புரிகிறது” என்றான் ஆனந்தா.
எல்லாம் அதன் போக்கில் நடக்கும். உங்கள் மனதின் கரையில் உட்கார்ந்துவிட்டால் போதும், அதற்கு எந்த ஆற்றலையும் நீங்கள் செலவழிப்பதில்லை. அதுதான் உண்மையான தியானம். கடந்து செல்வதின் கலைதான் தியானம்.
No comments