கும்பகோணம் தெய்வங்கள்
கும்பகோணம்: மக்களுக்கு நன்மை செய்வதற்காக தெய்வங்கள் மனித உருவில் அவதரித்தனர். மகாவிஷ்ணுவை திருமணம் செய்வதற்காகவே அன்னை மகாலட்சுமி மனித உருவில் முனிவரின் மகளாக அவதரித்த தலம்தான் திருநரையூர் சித்தீஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நாச்சியார்கோவில் அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இந்த ஊரின் புராண பெயர் நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம், திருநறையூர்ச்சித்திரம். வெள்ளிக்கிழமையான இன்று மகாலட்சுமி அவதரித்த சித்தீஸ்வரம் தலத்தை வழிபடுவோம் வாருங்கள் சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் தேவேஸ்வரர் என்றும், சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. துர்வாச முனிவரால் பறவை உருமாறி, சாமம் பெற்ற நரன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு நரபுரம் என்ற பெயரும் உண்டு. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் அறுபத்து ஐந்தாவதாகப் போற்றப் படுகிறது. திருநரையூரில் சித்தநாதேஸ்வராக எழுந்தருளியுள்ளார் ஈசன். இங்கிருக்கும் லிங்கம் மிகப்பழமையானவை. கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது. மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார்.
சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார். மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் தீர்த்தக் குளத்தில் ஒரு மலர்ந்த தாமரை மலரில் மேதாவி மகரிஷி முன் தோன்றினாள். மகரிஷியும் அவளை வளர்த்து திருமணப் பருவத்தில் மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார். அவ்வாறே சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர். சம்பந்தர், சுந்தரர் இருவரால் பாடப்பெற்று, திருநாவுக்கரசரால் திருத்தாண்டகத்தில் குறிக்கப்பட்டுள்ள இத்தலம் மிகப் பழமையானது. மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது. மேதாவி மகரிஷிக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. குபேரன், தேவர்கள், இங்கு இறைவனை வழிபட்டுள்ளனர். சிவ ஆலயத்தினும் முனிவர் மகளாக மகாலட்சுமி அவதரித்து வளர்ந்த தலமாக இருப்பதால் இந்த ஆலயம் சைவ வைஷ்ணவ ஆலயங்களுக்கு ஒற்றுமையாக திகழ்கிறது.
பௌர்ணமி தினங்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மகாலட்சுமி யாகம் செய்து வழிபட்டால் அரசாளும் யோகம் வரும் என்பது நம்பிக்கை. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறினால் 10 நிமிடத்தில் திருநரையூரை அடையலாம். அருகிலேயே மகாலட்சுமி மணம் முடித்த நாச்சியார் கோவில் உள்ளது.
No comments