சரஸ்வதி பூஜை செய்யும் முறையும் பலனும்!
சரஸ்வதி, ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 9.00 முதல் 10.30 வரை.
முதல் நாள் இரவே வீடு வாசல்நிலை, கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்துத்தூய்மை செய்து கொள்ளவும். மறுநாள் காலை எல்லாவற்றிற்கும் திருநீறு சந்தனம் குங்குமம் இவைகளினால் பொட்டுவைத்து அலங்கரிக்கவும். பூஜையறையின் முன் மேஜை போட்டு பட்டுத்துணியினால் பரப்பி அதன் மீது புத்தகங்கள் பேனாக்கள் பணப்பெட்டி முதலியவற்றை வைத்து முன்போல் பொட்டுவைத்து அலங்கரிக்கவும். மற்றொரு மேஜையிட்டு அதன்மீது வீட்டு உமயோகக்கருவிகளாகிய அரிவாள்மனை கத்தி அரிவாள் கடப்பறை மற்றும் ஆயுதங்களைக்கழுவி வைத்து பொட்டுவைத்து அலங்கரிக்கவும். விவசாய உபயோகக்கருவிகளை அவை இருக்குமிடத்திலேயே வைத்துக் கழுவி அலங்கரிக்கலாம். மாடு கன்றுகளையும் அதன் தொழுவத்திலேயே குளிப்பாட்டி சந்தனம் குங்குமமிட்டு மாலைகளால் அலங்கரிக்கவும். தொழில் நிறுவனங்களிலுள்ள இயந்திரங்களையும் அவ்வாறே தூய்மை செய்து அலங்கரிக்கவும்.
பூஜைப்பொருட்கள்: குங்குமம் சந்தனம் விபூதி உதிரிப்பூக்கள் பூச்சரங்கள் மாலைகள் பொரிகடலை சர்க்கரை சுண்டல் இனிப்புவகைகள் பழங்கள் வெற்றிலைப்பாக்கு சூடம் பத்தி சாம்பிராணி குத்துவிளக்குகள் கைமணி தீர்த்தபாத்திரம் ஆகியவற்றை முன்கூட்டியே தயார் செய்து கொள்ளவும். பூஜைக்கு ஏற்றாற்போல் எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்திக்கொண்டு விளக்கேற்றி மணியடித்து பூஜையைத்துவக்கவும். மஞ்சள் பொடியில் அல்லது பசுசாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து அருகம்பில்லினால் ‘ஓம் கணபதயே நமஹ‘ என்று அர்ச்சனை செய்து தூபம் காட்டி பழம் வெற்றிலைப்பாக்கு நிவேதனம் செய்து சூடம் காண்பித்து வழிபடவும்.
எங்களின் படிப்பு தொழி்ல் வியாபாரம் எல்லாம் எவ்வித இடையூறுமின்றி நல்லபடியாக நடக்க ஸரஸ்வதி பூஜையும் ஆயுதபூஜையும் விநாயகரிடம் வேண்டிக்கொண்டு முதலில் புத்தகங்களை பூக்களால் ‘ஓம் ஸ்ரீஸரஸ்வதி தேவ்யை நமஹ‘ என்று அர்ச்சிக்கவும். எழுதுகோல்களில் ‘ஓம் லேகினீ சக்தயே நமஹ‘ என்றும், அரிவாள் அரிவாள்மனை கத்தி இவைகளை ‘ஓம் கட்கினீ சக்தயே நமஹ‘ என்றும், மண்வெட்டியில் ‘ஓம் குந்தாளி சக்தயே நமஹ‘ என்றும், ஏர்கலப்பையில் ‘ஓம் ஹலாயுத சக்தயே நமஹ‘ என்றும், பசுமாட்டை ‘ஓம் கோமாதா தேவ்யை நமஹ‘ என்றும், காளையை ‘ஓம் ரிஷபதேவாய நமஹ‘ என்றும், இருச்கர நான்கு சக்கர மற்றும் மாட்டுவண்டிகளை ‘ஓம் த்வரிதா சக்தயே நமஹ‘ ஓம் சகட தேவதாயை நமஹ என்றும் வாசல் நிலை, கதவுகள், ஜன்னல்கள் எங்கும் ‘ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்ம்யை நமஹ‘ என்றும், இயந்திரங்கள் மோட்டார்கள் எல்லாவற்றிலும் ‘ஓம் ஸ்ரீதுர்க்காதேவ்யை நமஹ‘ என்றும் அர்ச்சனை செய்து மணியடித்தவாறு சாம்பிராணி தூபம் எங்கும் எல்லாவற்றிற்கும் காட்டவும்.
ஒருதட்டில் நிவேதனப் பொருட்களை வைத்து எடுத்துக்கொண்டு எங்கெல்லாம் பூஜை செய்தீர்களோ அங்கெல்லாம் சென்று மணியடித்தவாறு நீரினால் மூன்று முறைச்சுற்றி நிவேதனம் செய்து விட்டு புத்தகங்கள் எழுதுகோல்கள் ஆயுதங்களுக்கும் நிவேதனம் செய்யவும். தேங்காய் உடைத்து பழம் வெற்றிலைப்பாக்குகளுடன் நிவேதிக்கவும். பிறகு சூடம் ஏற்றி புத்தகங்கள் துவங்கி முன்போல் மணியடித்தவாறு எல்லாவற்றிற்கும் தீபாராதனை செய்து வழிபடவும். பிறகு குடும்பத்தினர்கள் மற்றும் அங்கிருப்பவர்கள் எல்லோர் கையிலும் புஷ்பம் கொடுத்து போடச்சொல்லி எல்லோரும் நமஸ்காரம் செய்து வழிபடவும். விபூதி குங்குமம் மற்றும் பொரிகடலை இனிப்புகள் ஆகியவற்றை எல்லோருக்கும் விநியோகித்து ஆரத்தியெடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.
ஆயுத பூஜை: நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆயுதங்களின் பயனை உணர்த்தவே ஆயுத பூஜை செய்யப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்று தொழில் நிறுவனங்களில் அங்குள்ள கருவிகளுக்கும், வீடுகளில் அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கும் பூஜை செய்ய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம். அந்தத் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களைத் தெய்வமாகப் போற்றும் விதமாக, அவற்றையும் கடவுளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை . சரஸ்வதி பூஜையன்று மாலையில் தொழில் உபகரணங்களை சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். மறுநாள் விஜயதசமியன்று அவற்றை எடுத்து தொழிலைத் துவங்கினால், ஆண்டு முழுவதும் தொழில் வளம் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.
ஜடப்பொருட்களிலும் தெய்வத்தைக் காண்பதே ஆயுதபூஜையின் நோக்கம். குழந்தைகள் படிப்பைத் துவங்கவும் இந்தநாளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
No comments